Thursday 31 March 2016

கடவுள் நம் கண் முன்னே ஏன் தோன்றுவதில்லை?

சில மதங்களை பின்பற்றுபவர்கள் கடவுள் இந்த பிரபஞ்சத்தை படைத்துவிட்டு வானத்தில் மிக உயரமான ஏதோ ஒரு இடத்தில இருந்துகொண்டு ஆட்சி செய்து வருகிறார் என்று நம்புகின்றனர். வேறு சில மதங்களை பின்பற்றுவோர் தர்மத்தை காக்கவும் , நல்வழியை காட்டவும் கடவுள் இந்த பூமிக்கு மனிதர்களாகவும் வேறு பல உயிரினங்களாகவும் பழங்காலத்தில் பிறப்பெடுத்து வந்தார் என்றும் நம்புகின்றனர்.

மனிதர்களில் பலருக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதில் சந்தேகம் இருக்கிறது. கடவுள் இருப்பதற்கான அறிவியல்பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை; எனவே சந்தேகத்திற்கு இடமின்றி கடவுள்  இல்லை என்று நாத்திகர்கள் கூறுகின்றனர்.

"கடவுள் இருப்பாரானால் மனிதர்களாகிய நாம் பார்த்து அறிந்துகொள்ளும் வகையில் அவர் ஏன் நம்முடைய கண் முன்னே நாம் புரிந்துகொள்ளும் உருவத்தில் தோன்றுவதில்லை? அவர் அப்படி தன்னை வெளிப்  படுத்தினால், அது அவர் இருப்பதற்கான மறுக்க முடியாத அத்தாட்சியாக இருக்குமே" என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனத்திலும் நாத்திகர்கள் மனத்திலும் ஒரு கேள்வி எழுகிறது. இது காலம் காலமாக கேட்கப்படும் கேள்விதான். மனிதர்களிடமிருந்தும் மற்ற அனைத்து படைப்பினங்களிடமிருந்தும் பிரிந்து இருக்கின்ற ஒரு தனி சக்தியாக மனிதர்கள் கடவுளை பற்றிய கருத்து கொண்டிருப்பதுதான் இந்த கேள்வி எழுவதற்கு காரணம்.

கடவுள் நம் கண் முன் ஏற்கெனவே எப்பொழுதும் தோற்றமளித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவள் எண்ணற்ற வடிவங்களில் நாம் காணுகின்ற எல்லா படைப்பினங்களாக எப்பொழுதும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறாள்.

கடவுள் சுத்தமான சக்தியாக (pure energy), சுத்த வெளியாக (absolute space), மெய்யுணர்வாக (consciousness) இருக்கிறது. அது நாம் காணக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய உருவத்திலோ, வடிவிலோ இல்லை.

கடவுள் ஏதோ ஒரு இடத்தில இருந்துகொண்டு இன்னொரு இடத்திற்கு நகரக்கூடியது அல்ல. அது எங்கும், எதிலும், எப்பொழுதும் ஆற்றலாக நிறைந்திருக்கிறது.  ஒரு இடத்தில மட்டும் கடவுள் தோன்றினால், மற்ற இடத்தில அது இல்லை என்றாகும்.  அது கடவுளால் முடியாது! கடவுளால் முடியாத ஒரு விஷயம், அவரால் இல்லாமல் இருக்க முடியாது(He cannot not exist) என்பதே.

எல்லா இடத்திலும் இருந்துகொண்டே  ஒரு குறிப்பிட்ட இடத்தில, குறிப்பிட்ட மக்களிடத்தில், குறிப்பிட்ட உருவத்தில் கடவுள் தன்னை வெளிப்படுத்தினால், அந்த குறிப்பிட்ட உருவம் மட்டுமே எல்லா காலத்துக்கும் கடவுளின் வடிவம் என்று அந்த மக்கள் முடிவு செய்து விடுவார்கள். மற்ற குழுவை சேர்ந்த மனிதர்கள் அதை கடவுளாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மேலும் தான் கடவுள் என்று கூறுவதற்கு அத்தாட்சியாக அவள்  மலைகளை நகர செய்தாலும் அல்லது  வேறு ஏதாவது அதிசயங்களை செய்து காட்டினாலும் அவளை பிசாசு என்றோ சாத்தான் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு தீய சக்தி என்றோ வேறொரு குழுவை சேர்ந்த மனிதர்கள் கூறுவார்கள்.  அல்லது இதெல்லாம் அந்த குழுவை சேர்ந்த மனிதர்களின் வெறும் கற்பனை என்று சொல்வார்கள்.

கடவுள் தன்னுடைய கடவுள் தன்மையை வெளிப்புறமாக இருந்து அவதானிப்பதின்(observation) மூலமாக தனக்கு தானே வெளிப்படுத்துவதில்லை. மாறாக, உட்புற அனுபவத்தின் மூலமாகவே தன்னை உணர்கிறார். மேலும், உட்புற அனுபவம் கடவுளை வெளிப்படுத்தும்போது வெளிப்புற அவதானிப்பு அவசியமற்றதாக ஆகிவிடுகிறது. வெளிப்புற அவதானிப்பு அவசியமென்றால், பிறகு உட்புற அனுபவம் சாத்தியமற்றதாக ஆகிவிடுகிறது. அதனால்தான் நம்மால் கடவுளை நமக்கு வெளியே உணர முடியாது. கடவுளை நமக்கு உள்ளே, உள்நோக்கிய அனுபவம் மூலம் மட்டுமே உணர முடியும்.

நாம் என்ன நினைக்கிறோமோ, என்ன கூறுகிறோமோ அதுவே நம்முடைய யதார்த்தமாக(reality) உருவெடுக்கிறது. அதையே நாம்  நம் வாழ்வில் அனுபவமாக பெறுகிறோம். அந்த வகையில், கடவுள் உங்கள் முன் தோன்ற வேண்டும் என்று நீங்கள் கேட்டால், இப்படி கேட்பதே கடவுள் இப்பொழுது, இங்கே இல்லை என்று நீங்கள் கூறுவதாகும். இந்த கூற்றே கடவுள் இல்லை என்கிற அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். இருக்கிறது என்று நினைத்தால் இருப்பதையும், இல்லை என்று நினைத்தால் இல்லாததையும் நீங்கள் அனுபவமாக பெறுவீர்கள்.



--- விவேக்

No comments:

Post a Comment