Saturday 26 March 2016

ஆத்ம சமாதி தியானம்(Soul Samadhi Meditation)


ஆத்ம சமாதி தியானம்

ஒவ்வொரு மனிதரும் தினமும் தியானம் செய்பவராக இருப்பது மிகவும் அவசியம். தியானம் செய்வதின்மூலம் நம்முடைய உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதுடன் நாம் உண்மையிலேயே யார் என்பதையும் அறிந்துகொள்வோம். தியானம் என்பது நமக்கு உள்ளே நாம் பிரயாணம் செய்வதாகும்.




ஆத்ம சமாதி தியானம் செய்யும் முறை 

தரையிலோ அல்லது நாற்காலியிலோ உங்களுக்கு வசதியான முறையில் அமர்ந்துகொள்ளுங்கள். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். பிறகு உங்கள் இயல்பான சுவாசத்தை கவனியுங்கள். சிறிது நேரம் சுவாசத்துடன் ஒன்றி இருங்கள். அதன்பிறகு இரு புருவங்களுக்கு  மத்தியில் உங்கள் கவனத்தை குவியுங்கள். இங்குதான் மூன்றாம் கண் இருக்கிறது. எந்த சிந்தனையும் இல்லாமல் மனதை வெறுமையாக வையுங்கள். எண்ணங்கள் தோன்றும்போதெல்லாம் உடனே அதை நிறுத்திவிட்டு, சிந்தனையற்ற நிலைக்கு திரும்புங்கள். உங்கள் கவனம் முழுவதும் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கட்டும். சிறிது நேரத்தில் சிந்தனையற்ற நிலைக்கு சென்றுவிடுவீர்கள். இப்பொழுது உங்கள் சுவாசத்தின் ஓசை மட்டும் உங்களுக்குள்ளே கேட்பீர்கள். பிரபஞ்ச சக்தி உங்கள் உடல் முழுவதும் பாய்ந்துகொண்டு இருப்பதை நன்கு உணர்வீர்கள். இதே நிலையில் தொடரும்போது ஒருவிதமான இசையை கேட்பீர்கள். நீல நிற ஒளி அங்கும் இங்கும் நகர்வதை காண்பீர்கள். இந்த ஒளி வேறு எதுவுமல்ல. உங்களுடைய ஆன்மாதான் அது. இந்த ஒளி தோன்றாவிட்டால் பரவாயில்லை. அதை கற்பனை செய்ய வேண்டாம். பிறகு நீங்கள் இறையோடு, பிரபஞ்சத்தோடு ஒன்றோடு ஒன்றாக கலந்துவிடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. சமாதி என்பதற்கு ஒன்றோடு கலந்துவிடுதல் என்று பொருள். இந்த நிலையில் நீங்கள் வேறு கடவுள் வேறு அல்ல, நீங்கள் வேறு பிரபஞ்சம் வேறு அல்ல. நீங்கள் எல்லாமுமாக இருக்கிறீர்கள்.

தியான நேரம் 

இந்த தியானத்தை தினமும் குறைந்தது 40 நிமிடங்களுக்கு செய்யுங்கள். உங்களுக்கு வசதியான  எந்த நேரத்திலும் இந்த தியானத்தை செய்யலாம். அதிகாலையில் இதை செய்தால் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருப்பதை நன்கு உணர்வீர்கள். நாளடைவில் உங்கள் உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஆரோக்கியமும் ஏற்படுவதை காண்பீர்கள்.



--- விவேக்

No comments:

Post a Comment